ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவனுக்கு, அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினமான 6/11/2014 அன்று, அப்பர் சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும்.
அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.
இந்த அபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை உட்கொண்டால் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது, காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர். இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று அன்னாபிஷேகத்தில் அரனை தரிசித்து அருள் பெறுவோமாக!
"உணவும் அவனே! உண்பவனும் அவனே!"
என்று இறைவனைப் போற்றுகிறது வேதம்.