தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்துவிடும்
மனந் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
முழு நில வதனில் முறையொடு பூஜைகள்
முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொன் குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி
கனகனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே
என்பான் தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்
சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான் - ( தனக்கிலை யீடு )
ஜெய ஜெய வடுக நாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய க்ஷத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்